ஏரல் : ஏரல் மெயின் பஜாரில் கீழே விழக்கூடிய நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பஜார் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கும் ஏரல் மெயின் பஜாரில் 400க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்களின் அன்றாட தேவைக்கும் விழாக்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏரல் பஜாருக்கு வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மெயின் பஜாரில் தற்போது பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள மின்கம்பத்தின் தோற்றம் அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது. மீன் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் அரிக்கப்பட்டு இன்றோ, நாளையோ என்று எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய நிலையில் மின்கம்பத்தின் நிலை உள்ளது. மின்கம்பம் கீழே சாய்ந்தால் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி கடைக்காரர்கள் மிகுந்த பயத்துடன் காணப்படுகின்றனர். அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏரல் மின்வாரியத்தில் வியாபாரிகள் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆபத்து ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றி வியாபாரிகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கே ற்ப செயல்படாமல் உடன் நடவடிக்கையில் ஏரல் மின்வாரியம் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக