ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

eral news

ஏரல் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பஞ்., ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் வாக்குவாதம்


ஏரல்:ஏரல் பஜாரில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் போது வியாபாரிகளுக்கும் பஞ்., ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் ஏரலில் பதட்டம் நிலவுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வணிகஸ்தலமாக ஏரல் விளங்குகிறது. ஏரலில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மெயின் பஜாரை பொறுத்தவரை பெரிய கடைகள் அதிகம் காணப்படுகின்றன. பஜாரில் ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே அகற்றிவிட வேண்டும் என்று பஞ்., சார்பில் அவ்வப்போது அறிவிப்பு கொடுப்பது வழக்கம் ஆனால் எந்தவித நடவடிக்கையும் பஞ்., சார்பில் எடுக்கப்படவில்லை இந்நிலையில் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றப்பட இருப்பதாக தேதி குறிப்பிட்டு அதன்படி நேற்று முன்தினம் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்த பணியின்போது குறிப்பிட்ட ஒரு கடையின் சுவரை இடிக்கும் பொழுது பிரச்னை ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என்ற பெயரில் பஞ்சயாத்தினர் அத்துமீறி செயல்படுவதாக கூறி வியாபாரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக கடையை அடைத்து விட்டு பஞ்., அலுவலர்களை முற்றுகையிட்டு காரசாரமான பேச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பிட்ட கடையில் நேற்று முன்தினமே இடித்து விட்டபின் நேற்றும் அக்கடையின் சுவரை இடிக்க காரணம் என்ன என்றும், அளவுக்கு அதிகமாக கடைகளின் சுவர்கள், படிக்கட்டுகளை இடித்து தள்ள என்ன காரணம் என்று வியாபாரிகள் கேள்வி கேட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் வியாபாரிகள், பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தொடர்ந்தது. இதனால் தொடர்ந்து பரபரப்பும் பதட்டமும் நிலவியது. தொடர்ந்து பஞ்சாயத்தை கண்டித்து வியாபாரிகள் கோஷங்கள் எழுப்பி அத்துமீறி செயல்படும் இச்செயலை கடுமையாக கண்டிப்பதாகவும் வியாபாரிகள் கூறினர். இதற்கிடையே உடனடியாக மாவட்ட கலெக்டர் ஏரலுக்கு வந்து இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என்றும் அதுவரை கடைகளை திறக்கப்போவதில்லை என்றும் கூறி வியாபாரிகள் நேற்று மாலை வரை கடை அடைத்து உள்ளதால் தொடர்ந்து ஏரலில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக